Tuesday 3 March 2015

வெள்ளை மனம்

"மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்"
 என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பறவை கூடு மிக மிக சிறியது. அதில் அளவில் பெரிய மான் வாழமுடியாது என்பதை கவிஞர் உணர்ந்திருந்தாலும்

"மனம்" மிகவும் பலம் வாய்ந்தது என்பதை உருவகபடுத்தி எழுதிருக்கிறார். ஆம் நம்முடைய மனம் மிகவும் சக்தி வாய்ந்ததே- குழப்பமில்லாமல் தெளிவான சிந்தனை இருந்தால். நமது வாழ்க்கையின் தரம் இந்த கலியுகத்தில் வெளிப்பார்வைக்கு பொருளாதார பார்வையில் பார்க்கபட்டாலும் உள்பார்வையில் ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதின் தன்மைகேற்பவே வாழ்க்கை தரம் அமைகிறது. இந்த சமுதாயத்தில் பலர் பணம் - பேர் - புகழ் - அந்தஸ்து - மரியாதை - ஆகிய நிலையில் உச்சியை அடைந்தாலும் அவர்களின் மனம் அமைதி பெறாமல் மன அமைதியை தேடி பல கோயில்களுக்கும், மலைகளுக்கும் சென்று கொண்டிருப்பதை  நாம் காண்கிறோம்.

                                         தம்பதியர் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தனர். இருவருக்கும் கிட்டதட்ட 45 வயது முதல் 50 வயது இருக்கும். அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. அந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் குறை கூறாமல், சண்டை போடாமல், ஒருவரை ஒருவர் விட்டுகொடுத்து நல்ல புரிதலுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் என்னிடம் கூறுகையில் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம், ஆனால் பல சமயங்களில் இந்த சமுதாய பார்வையும், சாடலும் எங்களை மிகவும் மன வேதனை அடைய செய்கிறது. இருந்தபோதிலும் அந்த வேதனையை பொருட்படுத்தாமல் இறை நம்பிக்கையோடும் , மகிழ்ச்சியோடும் வாழ்கிறோம் என்றனர். மேலும் அவர்கள் என்னிடம் கூறுகையில் எனக்கு அவர் தான் குழந்தை என்று மனைவியும், எனக்கு அவள் தான் குழந்தை என்று கணவர் ஆகிய இருவரும் குழந்தை போலவே என்னிடம் பேசி கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கு முன் மற்றொருவர் மரணம் அடையவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர். அடுத்த ஜன்மத்தில் நாங்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே வாழ வேண்டும் என்றும் தன் தன் விருப்பத்தை தெரிவித்தனர். இதனையே இறைவனிடம் நாங்கள் தினந்தோறும் வேண்டிவருகிறோம் என்றும் கூறினர்.
                                            அவர்கள் கண்களை பார்க்கும்போது அவர்களுக்குள் என்ன புரிதல், பாசம், அன்பு, பண்பு, தயை, காதல், ஞானம், தெளிவான மனம். இருவருடைய பார்வை, பேச்சு, செயல் அப்படியே குழந்தையை போலவே இருந்தது. இது தான் குழந்தை மனமோ.   தனக்கு எல்லாம் கிடைத்தும் அடுத்தவரை குறை கூறியும், பிரச்சனைகளை ஏற்படுத்தியும் வாழ்கின்ற இந்த காலத்தில் இந்த தம்பதியினர் கருது வேறுபாட்டால் பெற்றோரை விட்டு விலகியும், சகோதரர்களின் ஆதரவு இல்லாமலும், நிறைய கடன் பிரச்சனையாலும், பொருளாதார பற்றாக்குறையும், சமுதாய பார்வையின் சாடலும், சொத்துக்கள் பிரச்சனைகள் இருந்தும் மேலும் குழந்தை செல்வம் இல்லாத போதும் இந்த தம்பதியினர் நல்ல புரிதலுடன், அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்கின்றனர்.

இவர்கள் குடும்பத்தில் அணைத்து பிரச்சனைகளும் தாண்டவமாடுகிறது. எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுகொடுத்து அன்புடன் வாழ்கின்றனர். உண்மையானா அன்பு இருந்தால் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் மன நிறைவுடன் வாழலாம் என்பதற்கு இடு போன்ற தம்பதியினரே சாட்சி.

இந்த தம்பதியினரை பார்க்கும்போது அந்த பாடல் வரிகளின் அர்த்தம் புரிகிறது.

"மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்" நிச்சயம்.

                                                   

                                   

No comments:

Post a Comment